feedback

புதன், 19 ஜனவரி, 2011

நத்தை

சிறிது காலம் உன் பிரிவு தாளாது
உறங்கிப்போன காய்ந்த கூடு
வசந்த காலங்களில்
உன் வீட்டின் வாசல் வரை
மெல்ல நடை போடும்

சனி, 15 மே, 2010

பிரிவு

தூங்காத பொழுதுகளும்
தொலைந்து போன கனவுகளும்
உன் வருகைக்காய் மட்டுமே
காத்து கிடக்கும் ....

உன் வீட்டின் வழியே
கால்கள் கடந்து போகையில்
விரல்களின் ரகசிய வழியனுப்பதலுக்காய்
கண்கள் இரண்டும் தேடல் கொள்ளும்

அதைக்கண்டு வெட்கப்பட்ட
காய்க்காத உன் புன்னகை பூ
ஆலமரமாய் என்னுள் வளர எத்தனிக்கும்

எங்கேயோ எதேச்சையாய் நம்
சந்திப்பின் காலங்களில்
சலனத்தை காட்டாத உன் முகம்
பாதைகள் கடந்த பின்
தலை திருப்பி எனையே எதிர்பார்க்கும்

சில நேரம் ''''
எதையோ சொல்ல நினைக்க..
உதடு மறித்து , உளறி வைக்கும்

இடையினில் உன் புன்னகை
அன்றைய பொழுது சாயுமட்டும்
என்னை உயிரோடு வாழவைக்கும்

சிறிதுதூரம் நீ பயணப்பட்டு போகையில்
உன் பிரிவு தாளாமல் இதயமும்
உந்துனையாய் உன்னோடு வரும்
நீ எனக்காய் உன்னுடையதை
விட்டுச் செல்வாய் ...

உன் புன்னகையின் அர்த்தம்
எப்படி எனக்கு தெரியாதோ -அப்படியே
உன் இல்லாத காலங்களில்
உன் மௌனத்தின் அர்த்தங்களும்

உன்னால் விளைந்த காதலை
என்னால் எப்படி தாங்க முடிகிறதோ
அப்படியே உன் பிரிவும் ......
அன்புடன் நான் ........

புதன், 5 மே, 2010

கூடல்

நிலவொளியில் மட்டும் காய்கிறது
நம் செய்த பாவ கரைகளின்
துவையாத உள்ளாடைகள்

நிலவு

நம்மை பார்த்து சிரிக்கும்
நிலவுக்கு தெரியும்
ஏதோ ஓரிடத்தில்
யாரோ கலங்கடிக்கிறார்கள்
நிலவின் பிம்பத்தை
தண்ணீரில் கல்லெறிந்து

அறிவிப்பு

வானொலி அறிவிப்பு
இன்னும் இருபத்திநான்கு
மணி நேரத்தில்
புயல் தாக்க கூடும்
எச்சரிக்கை தேவை
அலச்சியம் செய்தேன்
எதிரே நீ வந்தாய் -ஒரு நிமிடம்
சிதைந்து விட்டது என் வாழ்க்கை

கோழை

பெண் எதிரே காதலை சொல்பவன்
வீரன் என்கிறாய்
நான் உன்னிடம் சொன்னபோது
கோழை ஆகிறேன்

பொய்

எனைக் கண்ட யாரிடமும்
தெரிந்தே பொய் கூறுகிறேன்
இதுவரை காதல் இல்லை என்று
நடந்தேறிய உன் திருமணத்துக்குப்பின் ..