feedback

சனி, 15 மே, 2010

பிரிவு

தூங்காத பொழுதுகளும்
தொலைந்து போன கனவுகளும்
உன் வருகைக்காய் மட்டுமே
காத்து கிடக்கும் ....

உன் வீட்டின் வழியே
கால்கள் கடந்து போகையில்
விரல்களின் ரகசிய வழியனுப்பதலுக்காய்
கண்கள் இரண்டும் தேடல் கொள்ளும்

அதைக்கண்டு வெட்கப்பட்ட
காய்க்காத உன் புன்னகை பூ
ஆலமரமாய் என்னுள் வளர எத்தனிக்கும்

எங்கேயோ எதேச்சையாய் நம்
சந்திப்பின் காலங்களில்
சலனத்தை காட்டாத உன் முகம்
பாதைகள் கடந்த பின்
தலை திருப்பி எனையே எதிர்பார்க்கும்

சில நேரம் ''''
எதையோ சொல்ல நினைக்க..
உதடு மறித்து , உளறி வைக்கும்

இடையினில் உன் புன்னகை
அன்றைய பொழுது சாயுமட்டும்
என்னை உயிரோடு வாழவைக்கும்

சிறிதுதூரம் நீ பயணப்பட்டு போகையில்
உன் பிரிவு தாளாமல் இதயமும்
உந்துனையாய் உன்னோடு வரும்
நீ எனக்காய் உன்னுடையதை
விட்டுச் செல்வாய் ...

உன் புன்னகையின் அர்த்தம்
எப்படி எனக்கு தெரியாதோ -அப்படியே
உன் இல்லாத காலங்களில்
உன் மௌனத்தின் அர்த்தங்களும்

உன்னால் விளைந்த காதலை
என்னால் எப்படி தாங்க முடிகிறதோ
அப்படியே உன் பிரிவும் ......
அன்புடன் நான் ........

புதன், 5 மே, 2010

கூடல்

நிலவொளியில் மட்டும் காய்கிறது
நம் செய்த பாவ கரைகளின்
துவையாத உள்ளாடைகள்

நிலவு

நம்மை பார்த்து சிரிக்கும்
நிலவுக்கு தெரியும்
ஏதோ ஓரிடத்தில்
யாரோ கலங்கடிக்கிறார்கள்
நிலவின் பிம்பத்தை
தண்ணீரில் கல்லெறிந்து

அறிவிப்பு

வானொலி அறிவிப்பு
இன்னும் இருபத்திநான்கு
மணி நேரத்தில்
புயல் தாக்க கூடும்
எச்சரிக்கை தேவை
அலச்சியம் செய்தேன்
எதிரே நீ வந்தாய் -ஒரு நிமிடம்
சிதைந்து விட்டது என் வாழ்க்கை

கோழை

பெண் எதிரே காதலை சொல்பவன்
வீரன் என்கிறாய்
நான் உன்னிடம் சொன்னபோது
கோழை ஆகிறேன்

பொய்

எனைக் கண்ட யாரிடமும்
தெரிந்தே பொய் கூறுகிறேன்
இதுவரை காதல் இல்லை என்று
நடந்தேறிய உன் திருமணத்துக்குப்பின் ..

எதிர்காலம்

உயர் பதவி உத்தியோகம்
உல்லாச சிற்றுந்து
குளிர்சாதன குடிலுடன்
கும்மாள நீச்சல்குளம்
தன்கீழ் பலபேர்
தலைதாழ்த்தி வேலை பார்க்க
கனா கண்டேன் நான்
வகுப்பறை தூக்கத்திலே ...

எதிர்பார்ப்பு

எதிபார்ப்புடன் கண்ணில் பட்டது
குப்பை தொட்டியில் குழந்தை
-என்னுடையதோ

அவள்

அழகிய வேலைப்பாடுடன்
அட்சய பாத்திரம்-ஓஹ் அவள்

வறுமை

கிடைக்கவில்லை எனக்கு
வயிற்றெரிச்சலில் நான்
-குப்பைதொட்டியில் நாய்

திங்கள், 3 மே, 2010

கரைகளின் ஈரம்

ஓல குடிசை ஓரத்துல
சூரியன் தொலஞ்ச நேரத்துல
கட்டி வச்ச கோட்ட ஒண்ணு
கரையாம பாத்துகிட்டேன் .

ஓடி வந்த அலையால
ஒருபட்டு நனையலன்னு
ராத்திரி கேட்ட மகன்கிட்ட
பொய்யைத்தான் சொல்லிவச்சேன் ...

கடலுக்கு போன மச்சான் இன்னும்
கரை வந்து சேரலியே
கவலையெல்லாம் கூட்டிகிட்டு
கண்விழிச்சு காத்திருந்தேன்
மாமன் இன்னும் வரலியே ...
கண்மூடி தூங்கிபுட்டேன் காலையில .

என் புருஷன் அடிச்சானோ என்னவோ
வேகமா எந்திரிச்சேன் வலியோட
ஐயோ ...
ஒத்த புள்ளைய காணலியே நான்
பெத்த புள்ளைய காணலியே
ஒன்டிருந்த வீட்டையும் காணலியே
ஓடுகாலி கடலால..

எங்கேயும் காணலியே
என்ன பெத்த ராசாவே ..
முத்தெடுக்க போன மச்சான்
திரும்பி வந்தா என்ன சொல்ல

தெருவெல்லாம் தேடிப்பார்த்தேன்
பொணம்கூட கெடைக்கலியே ...
கரையெல்லாம் தேடி பார்த்தேன்
கண்ணே உன்ன பார்க்கலியே ..

கண்னீர நான் கொட்ட மாட்டேன்
அது கடலுக்குள்ள சேர்ந்திடுமே
பாவ மகன் குடிக்கத்தான்
பாலு மட்டும் கேப்பானே
கொட்டிவச்சேன் பாலத்தான்
கொடம்கொடாம கடலுக்குள்ள ...

பொங்கலுக்கு கேட்டேன்னு
புது துணி வாங்கி வச்சேன்
நான் பெத்த ராசாவே சீக்கிரமா வந்திடையா...
போட்ட சட்ட அழுக்கானா யாரு
உனக்கு புதுசு தருவா
அழுக்கானா அம்மா அடிப்பாளேன்னு
வீட்டுக்கு வராம இருந்திடாதய்யா ..

ஒத்த உசிர புடிச்சு கிட்டு
உனக்காக நான் காத்திருக்கேன்
சீக்கிரமா வந்திடையா ...

சனி, 1 மே, 2010

வரலாறு....

பழஞ் சோறு தின்று
பழங்கதைகள் பேசி
பழகிப்போன மனிதர்களிடம்
எப்படிச்சொல்வது அவர்களது வரலாற்றை..

யாரிடம் சொல்வது இதை ...
முச்சந்தியில் அடித்துக்கொள்ளும் சகோதரதினடத்தில்
இருக்கும் ஆயுதம் யாருடையது என்பதை ...

பதிவுகள் இல்லாத அவர்களின்
வாழ்கை என்னவோ இதுதான் ......
அவர்களிடம் சொல்லி வந்த
பாதையும் இதுதான் ....

எப்படிச் சண்டை இடுவார்கள்.....
அவர்களின் பாட்டனும் பூட்டனும்
சண்டையிட்ட கதையை சொல்
அவன் அப்பன் ஆத்தா அடிச்சிகிட்ட
கதையும் கூட சொல்

நாங்கள் உங்கள் பாதுகாவலர்கள்
எங்கள் துப்பாக்கி முனைகள்
உங்களை பார்த்துக்கொண்டே தான் இருக்கும்

உங்கள் எதிரியின் பீரங்கிகளின்
முனைகளை விட சிறிய முனைதான் அது
நாங்கள் உங்களை விட்டு விலகுவதும் இல்லை
உங்களை கைவிடுவதும் இல்லை ...
நாங்கள் உங்கள் பாதுகாவலர்கள்
என்றிருக்கவேண்டும் அரண் ...

கம் யுனிசத்தின் வர்ணம் அங்கே
உள்ளிருந்து வெளியே கொட்டப்படும்

தலைவன் இருக்கிறன் ..
கவலை கொள்ளாமல்
அவர்களின் சுதந்திரத்தை
அவனிடம் பத்திரமாக
கொடுத்து வைக்கச் சொல் ..
சண்டைகள் முடிந்த பின்
அவர்களின் ஆன்மாவிடமாவது
திருப்பி தரப்படும் என்று சொல்..


சில நேரம் சிவப்பு ரத்தங்களில்
தட்டுகள் தறிக்கெட்டு ஓடும்..
உடல் சூடாகும்..
மூளை வேலை செய்யும்...
சிந்தித்து மட்டும் விட்டால்.. கூடாது

துப்பாக்கியை கையில் கொடு
தூங்காமல் விழிக்க கற்றுக்கொடு
பழைமை பேசு ...
பகை வளர் ...-இறுதியில்
துப்பாகிகள் மட்டும் பேசிக்கொள்ளும்
அவர்கள் பேசாமல் சாவார்கள்..

பழஞ் சோறு தின்று
பழங்கதைகள் பேசி
பழகிப்போன மனிதர்களிடம்
எப்படிச்சொல்வது அவர்களின் இந்த வரலாற்றை..

தேசம்

இன்னும் தொலைவு ஆயினும்
நான் செல்ல வேண்டும்
எனக்கான வேலை அங்கே
கொஞ்சம் இருக்கிறது...
இதோ இன்னும்
விடியல் இருப்பினும்
கனவுகள் என்னை எழுப்புகின்றன...

என் வானமே ..
நீ அருகில் வராதே
என் பூமியே ..
நீ தொலைந்து போகாதே
நான் நாடு கடத்தப்பட்டுருக்கிறேன்
என் தேசத்திலிருந்து..

அந்த இடத்தில் என்ன இருக்கிறது
என் விதிகளை மீறிச் செல்கிறேன்
பாதைகள் வேகமெடுக்கின்றன ...

வறண்ட பாலைவனத்தின்
மனிதனைப் போல நான் தாகமெடுத்திருக்கிறேன்

தூக்கு மேடையின் கைதியை போல் -இங்கே
நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்
பஞ்சத்தை
கூவி விற்கும் முதலாளிகள் இங்கே
அமைதி இல்லாமல் உறங்குகிறார்கள்

பச்சை புல்வெளிகளிருந்தும்
பாதிதூரம் கடந்து வந்து
திரும்பி பார்க்கும்
குளத்தின் கரையினிருந்தும்
தேவைகளுக்காய் மட்டுமில்லாது
என் சமூகத்திற்காகவும் தூக்கிய சென்கொடியிலிருந்தும்
நான் தனிமை பட்டிருக்கிறேன்

'காதலின் துயரம் ' என்னை துரத்தட்டும்
'செம்மணி வளையல்கள் ' என்னை நெருக்கட்டும் ...
நான் விரைந்து செல்ல வேண்டும்

வழிநெடுக வீசும் சிவந்த பூக்களின் நிறம்
புரட்சியின் நாட்களை நினைவு படுத்தும்
நான் சந்தோசமாய் ராகங்கள் பாடுவேன்....

ஏய் காவலனே..
நான் ஊர்செல்லும் மட்டும்
உயிர் வாழ
கொஞ்சம் ரொட்டி கொடு

அதோ அங்கே ஓரிடத்தில்
அது சிறைபட்டு இருக்கிறது
பணத்தின் முதலாளிகளாய் ..
பாடுபடாதவனின் கட்சிகளாய்
பூஷ்வாவின் கையில் அது சிறைபட்டிருக்கிறது.

விடுதலையின் அர்த்தம் அதற்க்கு
இன்னும் வழங்கப்படாமலே இருக்கிறது
வேதனையின் புலம்பல்கள் மட்டும்
அங்கே தினந்தோறும் கேட்டுக்கொண்டே இருக்கிறது...

ஆண்டுகள் பல கடந்தாலும்
அடிமைச் சமூகம் அங்கேதான்
இன்னும் ஒருமித்து கிடக்கிறது
பழங்கதைகள் பேசிபேசி
புலாங்கிதுப்போன தலைவர்கள்
இன்னும் கொலைசெய்கிறார்கள்
என் சமூகத்தையும் ...
என் நாட்டையும்...

அந்த இடத்தில் என்ன இருக்கிறது
என் விதிகளை மீறிச் செல்கிறேன் ...
என் தேசமே உன் நினைவுகள் சுமந்தபடி .........