feedback

சனி, 1 மே, 2010

தேசம்

இன்னும் தொலைவு ஆயினும்
நான் செல்ல வேண்டும்
எனக்கான வேலை அங்கே
கொஞ்சம் இருக்கிறது...
இதோ இன்னும்
விடியல் இருப்பினும்
கனவுகள் என்னை எழுப்புகின்றன...

என் வானமே ..
நீ அருகில் வராதே
என் பூமியே ..
நீ தொலைந்து போகாதே
நான் நாடு கடத்தப்பட்டுருக்கிறேன்
என் தேசத்திலிருந்து..

அந்த இடத்தில் என்ன இருக்கிறது
என் விதிகளை மீறிச் செல்கிறேன்
பாதைகள் வேகமெடுக்கின்றன ...

வறண்ட பாலைவனத்தின்
மனிதனைப் போல நான் தாகமெடுத்திருக்கிறேன்

தூக்கு மேடையின் கைதியை போல் -இங்கே
நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்
பஞ்சத்தை
கூவி விற்கும் முதலாளிகள் இங்கே
அமைதி இல்லாமல் உறங்குகிறார்கள்

பச்சை புல்வெளிகளிருந்தும்
பாதிதூரம் கடந்து வந்து
திரும்பி பார்க்கும்
குளத்தின் கரையினிருந்தும்
தேவைகளுக்காய் மட்டுமில்லாது
என் சமூகத்திற்காகவும் தூக்கிய சென்கொடியிலிருந்தும்
நான் தனிமை பட்டிருக்கிறேன்

'காதலின் துயரம் ' என்னை துரத்தட்டும்
'செம்மணி வளையல்கள் ' என்னை நெருக்கட்டும் ...
நான் விரைந்து செல்ல வேண்டும்

வழிநெடுக வீசும் சிவந்த பூக்களின் நிறம்
புரட்சியின் நாட்களை நினைவு படுத்தும்
நான் சந்தோசமாய் ராகங்கள் பாடுவேன்....

ஏய் காவலனே..
நான் ஊர்செல்லும் மட்டும்
உயிர் வாழ
கொஞ்சம் ரொட்டி கொடு

அதோ அங்கே ஓரிடத்தில்
அது சிறைபட்டு இருக்கிறது
பணத்தின் முதலாளிகளாய் ..
பாடுபடாதவனின் கட்சிகளாய்
பூஷ்வாவின் கையில் அது சிறைபட்டிருக்கிறது.

விடுதலையின் அர்த்தம் அதற்க்கு
இன்னும் வழங்கப்படாமலே இருக்கிறது
வேதனையின் புலம்பல்கள் மட்டும்
அங்கே தினந்தோறும் கேட்டுக்கொண்டே இருக்கிறது...

ஆண்டுகள் பல கடந்தாலும்
அடிமைச் சமூகம் அங்கேதான்
இன்னும் ஒருமித்து கிடக்கிறது
பழங்கதைகள் பேசிபேசி
புலாங்கிதுப்போன தலைவர்கள்
இன்னும் கொலைசெய்கிறார்கள்
என் சமூகத்தையும் ...
என் நாட்டையும்...

அந்த இடத்தில் என்ன இருக்கிறது
என் விதிகளை மீறிச் செல்கிறேன் ...
என் தேசமே உன் நினைவுகள் சுமந்தபடி .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக