feedback

திங்கள், 3 மே, 2010

கரைகளின் ஈரம்

ஓல குடிசை ஓரத்துல
சூரியன் தொலஞ்ச நேரத்துல
கட்டி வச்ச கோட்ட ஒண்ணு
கரையாம பாத்துகிட்டேன் .

ஓடி வந்த அலையால
ஒருபட்டு நனையலன்னு
ராத்திரி கேட்ட மகன்கிட்ட
பொய்யைத்தான் சொல்லிவச்சேன் ...

கடலுக்கு போன மச்சான் இன்னும்
கரை வந்து சேரலியே
கவலையெல்லாம் கூட்டிகிட்டு
கண்விழிச்சு காத்திருந்தேன்
மாமன் இன்னும் வரலியே ...
கண்மூடி தூங்கிபுட்டேன் காலையில .

என் புருஷன் அடிச்சானோ என்னவோ
வேகமா எந்திரிச்சேன் வலியோட
ஐயோ ...
ஒத்த புள்ளைய காணலியே நான்
பெத்த புள்ளைய காணலியே
ஒன்டிருந்த வீட்டையும் காணலியே
ஓடுகாலி கடலால..

எங்கேயும் காணலியே
என்ன பெத்த ராசாவே ..
முத்தெடுக்க போன மச்சான்
திரும்பி வந்தா என்ன சொல்ல

தெருவெல்லாம் தேடிப்பார்த்தேன்
பொணம்கூட கெடைக்கலியே ...
கரையெல்லாம் தேடி பார்த்தேன்
கண்ணே உன்ன பார்க்கலியே ..

கண்னீர நான் கொட்ட மாட்டேன்
அது கடலுக்குள்ள சேர்ந்திடுமே
பாவ மகன் குடிக்கத்தான்
பாலு மட்டும் கேப்பானே
கொட்டிவச்சேன் பாலத்தான்
கொடம்கொடாம கடலுக்குள்ள ...

பொங்கலுக்கு கேட்டேன்னு
புது துணி வாங்கி வச்சேன்
நான் பெத்த ராசாவே சீக்கிரமா வந்திடையா...
போட்ட சட்ட அழுக்கானா யாரு
உனக்கு புதுசு தருவா
அழுக்கானா அம்மா அடிப்பாளேன்னு
வீட்டுக்கு வராம இருந்திடாதய்யா ..

ஒத்த உசிர புடிச்சு கிட்டு
உனக்காக நான் காத்திருக்கேன்
சீக்கிரமா வந்திடையா ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக